முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

’கருப்புச் சட்டை’ காத்திருக்கு பெரியார் திடலில்!

அப்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நீ திடலுக்கு வரத் தொடங்கினாய்!

நெஞ்சினிக்கும் நெய்மணக்கும் நெய்வேலி திராவிடர் கழகப் பொதுக்குழுவின் தீர்மானத்துக்குப் பிறகு, நாற்பதுக்கு நாற்பதென்று வெற்றிக்கனி பறித்து, சென்னையிலிருந்தபடி டெல்லியின் ஆட்சிக் கட்டிலுக்கு நான்கு கால்களையும் உறுதிசெய்திருந்தாய்!

2004 ஜூன் - கடல்கடந்தும் தமிழனாய் இணைத்த சிங்கப்பூர் சாரங்கபாணி நூற்றாண்டு விழாவுக்காக மீண்டும் கால் பதித்தாய் பெரியார் திடலில்!

’காலவெள்ளத்தில் வெவ்வேறு பயணங்களிலிருந்த எங்களை இணைத்தார் சிங்கப்பூர் சாரங்கபாணி - என்னை அழைத்ததும் ஒரு சாரங்கபாணி (ஆருயிர் இளவல் வீரமணி) தான்’ என்று சிலேடையால் மகிழ்ந்தாய்! ’அண்ணன் - தம்பி உறவென்றாலும் சண்டை வரலாம்; தாய் - தந்தை உறவென்றாலும் சந்தேகம் வரலாம்; திராவிடர் கழகத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இருப்பது தாய் - மகன் உறவு’ என்று நெஞ்சுருகச் சொன்னாய்!

இறையனார் மறைந்தார் - ஆசிரியர் அமெரிக்காவில்! தம்பிக்கும் சேர்த்து ஆறுதலாய் வந்து நின்றாய் திடலின் ஒரு குறுகிய அறையில்!

பொருளாளர் சாமிதுரை மறைந்தார் - அவர்தம் அன்பு நண்பர் திருச்சி மாநாட்டில்! இளவலுக்கும் சேர்த்து திடலில் வந்து நீ தான் மரியாதை செலுத்தினாய்!

சமூகநீதிக்கான வீரமணி விருது - வழங்கி மகிழ்ந்தது பெரியார் பன்னாட்டமைப்பு! தம்பியின் பெயரிலமைந்த விருதை தனயன் நீ தயங்காமல் வந்து பெற்றாய்!

இப்படி மாநாடுகள், விழாக்கள், பிறந்தநாள் என்று எத்தனையோ முறை வந்துபோனாய்! ஒவ்வொரு முறையும் உன் வரவை நினைவாக்கிய அடையாளம் உண்டு பெரியார் திடலில்!

நீ நட்ட மாங்கன்று வளர்ந்து உன் பெயரைத் தாங்கியே படர்ந்து வளர்ந்திருக்கிறது!

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற நீ போட்ட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமைச் சட்டத்திற்குச் சாசனமாய் ஒரு கல்வெட்டு முளைத்தது அய்யா நினைவிடத்தில்!

தமிழர்க்குப் புத்தாண்டு தை முதல்நாளே என்று தரணியறிய அறிவித்தாய் - உன் தாய் வீட்டில் மீண்டுமொரு கல்வெட்டு தோன்றியது. இடையில் நுழைந்தோர் சித்திரையென்று திரித்தாலும், எப்போது தன்மானத் ’தை’ - புத்தாண்டானது என்று எவரேனும் கேட்டால், காலமெல்லாம் உன் பெருமை சொல்லி நிற்குமென்று பெருமிதத்தோடு இன்றும் உன் இளவல் அக் கல்வெட்டின் வரலாற்றுக்குக் கட்டியம் கூறுகிறார்!

உன் நூற்றாண்டுக் கல்வெட்டையும் நீயே திறக்க வருவாய் தானே திடலுக்கு!

நடந்து படியேறியவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறாரென்றதும், உன் வாகனம் நிற்குமிடத்திலிருந்து மேடைக்கு நீளமாய் ஒரு நிரந்தரச் சாய்தளமிட்டு, மீண்டும் மீண்டும் மேடையேறென்று அழைத்து வந்தார் ஆசிரியர்!

உனக்குப் பிறந்தநாளா? விழாக்கோலம் பூணும் பெரியார் திடல்!

ஜூன் 3 என்றால்...
பிறந்தநாளன்று கலைஞரைப் பக்கத்தில் பார்க்க வேண்டுமா கிளம்பு பெரியார் திடலுக்கென்று - அதிகாலையிலேயே அணிஅணியாய்த் திரண்டனர் உடன்பிறப்புகள்!

முதல்வராக வந்த போது திடலில் குவிந்திருந்தன காக்கிச் சட்டைகள்... பின்னர் திமுகழகத் தலைவராக வந்தபோது குறைந்தன காக்கிச் சட்டைகள்... திரண்டிருந்தன கருப்புச் சட்டைகள்!

அண்ணனை வரவேற்க ஆகியிருக்கும் ஏற்பாடுகளை அதிகாலையிலேயே வந்து உறுதி செய்வார் உன் ஆருயிர் இளவல்! தந்தையைப் பார்க்கத் தாய் வீட்டுக்கு வரும் தனயனைத் தம்பியாய் வரவேற்க அத்தனை ஆனந்தம்!

உயர்ந்த கட்டிடங்களைத் தாண்டி ஒலித்த ’வாழ்க’ ஒலிகளுக்கு மத்தியில்,
அண்ணாவைப் பார்த்து விட்டு, அய்யாவைப் பார்க்க...

கையசைத்தபடி நடந்து வந்தாய்... பின்
கைப்பிடித்து மெல்ல நடை போட்டாய்... பிறகு
ஆசிரியர் ஒரு பக்கம், ஆ.ராசா ஒரு பக்கமென
தம்பிகளின் தோளில் கைபோட்டு நடை பழகினாய்...

பின்னொரு நாள்.... வாகனத்தில் உன் இருக்கையே மெல்ல இறங்கி சக்கர நாற்காலியாக மாறி அய்யா நினைவிடத்திற்குச் சாய்தளத்தில் ஏறியது..!

’கலைஞர் வரும்போது கட்டுக்கடங்கா கூட்டம் வரும்’ என்பதால் நடைபாதை போதவில்லை’ என்று, அய்யா நினைவிடத்திற்குப் போகும் வழியை உன் வரவுக்காக விரிவாக்கினார் ஆசிரியர்.

ஆறாம் முறை முதலமைச்சர் எனும் வாய்ப்பைத் தமிழகம் இழந்திருந்தது கடந்த ஆண்டு! கிட்ட வந்த வெற்றிக்கனி - ஊசலாட்டத்தில் கையை விட்டுத் தள்ளிப்போனது!

அதனாலென்ன, எத்தனை இடர் வந்தாலும், உடல் எத்தனை வதை பட்டாலும், மனம் எத்தனை துயருற்றாலும், காயம்பட்ட கீரி படுத்துருளும் பச்சிலை போல் எனக்குப் பெரியார் திடல் என்று கிளம்பி நீ வந்தாய்!


அண்ணனின் வரவுக்காக இனிப்பு வகைகளுடனும், புத்தகக் கட்டுடனும் காத்திருந்த உன் ஆருயிர் இளவல் வாசலில் வந்து வரவேற்றார்.

இறுகப் பற்றிய ஒரு நொடி வாழ்த்தில், துளிர்த்தது விழிநீர்! அதில் ஓராயிரம் வரலாற்றுக் காட்சிகள் உங்களிருவர் கண்களில் வந்துபோயின. மலர் தூவி மகிழ்ந்துவிட்டு, அய்யாவை வேராய்க் கொண்டு அகன்று விரிந்து ஒளிபரப்பும் அந்தச் சுடரை ஆற அமரப் பார்த்தாய்! அடுத்த ஆண்டும் வருவீர்கள் என்று வாழ்த்தி அனுப்பியது திடல்!

இதோ... ஜூன் 3!
இன்னும் சில மணியில் விடியல்!

உன்னைப் பார்க்க வேண்டுமென்று
உதயசூரியன் காத்திருக்கும்
மெரினா கடலில்!

உன் வரவுக்காகக்
’கருப்புச் சட்டை’ காத்திருக்கு
பெரியார் திடலில்!

வா தலைவா!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ஜெயா தொலைக்காட்சிக்கு என் இரங்கல்!

ஜெயா தொலைக்காட்சியில் மூடிக் கிடக்கும் போயஸ் தோட்டத்தின் கதவுகளைக் காட்டியபடி, முதலமைச்சரின் மறைவுச் செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆம்... ஜெயா தொலைக்காட்சிக்கு இப்போது மட்டுமல்ல, எப்போதும் அவர் தான் முதலமைச்சர்.


அது காலம் முழுக்க ஜெயலலிதா அம்மையாரின் சிறப்புகளைச் சொல்வதற்காகவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் தொலைக்காட்சி. தேர்தல் தோல்வி என்றால் கூட அடுத்த சில நிமிடங்களில் தேர்தல் செய்திகள் கூட அதில் வராது. முதலமைச்சர் பதவி இல்லையென்றாலும் அதற்கு ஜெயலலிதா தான் முதல்வர். "மக்கள் முதல்வர்" என்ற பெயரை உருவாக்கிக் கொடுத்ததும் அதுதான்.

ஜெயலலிதா மீண்டும் ஜெயித்த போது இரட்டிப்பு போனசெல்லாம் வழங்கி மகிழ்ந்திருக்கிறார். பணியாற்றிய அனைவருக்கும், பதவி வேறுபாடற்று ஒரு லட்சம் ரூபாய் போனஸ் வழங்கியெல்லாம் கூட கொண்டாடியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதிமுக என்ற கட்சியினுடையது என்றெல்லாம் அந்தத் தொலைக்காட்சியைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. பிற கட்சி ஊடகங்களைப் போல, அதன் இரண்டாம் கட்ட, வருங்காலத் தலைவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தராதது. அது முற்றும் முழுதாக ஜெயலலிதா அவர்களின…

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…